#Group2Mains_2023. 01) குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் 02) விண்வெளி தொழில் பூங்கா 03) விண்வெளி துறைமுகம்
01) குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்
02) விண்வெளி தொழில் பூங்கா
03) விண்வெளி துறைமுகம்
ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவு தளத்தில் இருந்து இஸ்ரோ நிறுவனம் ராக்கெட்டுகளை ஏவி வருகிறது.
விண்வெளி ஆராய்ச்சி துறையில் இந்தியா உலகநாடுகளில் முன்னணி நாடாக வேகமாக வளர்ந்து வருகிறது. சொந்த நாட்டு செயற்கைகோள்களை மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களையும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது. பல நாடுகள் தொடர்ந்து செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோவை நாடி வருகின்றன. இதன் காரணமாக இஸ்ரோவுக்கு கூடுதல் ராக்கெட் ஏவுதளம் தேவைப்படுகிறது.
இந்தியாவிலேயே புவியியல் அடிப்படையில் பூமத்திய ரேகைக்கு அருகில் ஸ்ரீஹரிகோட்டா இருப்பதால்தான் தலைசிறந்த ஏவுதளமாக விளங்குகிறது. அதேபோல் பூமத்திய ரேகைக்கு இன்னும் மிக அருகில் குலசேகரப்பட்டணம் இருப்பதால், குறைந்த பொருட்செலவில் ராக்கெட்டுகளை அனுப்ப புவியியல் ரீதியாக குலசேகரப்பட்டினம் உகந்த பகுதியாக இருப்பதாக இஸ்ரோ கண்டறிந்துள்ளது.
ராக்கெட் ஏவுதளத்திற்கு ஏற்ற இடம் என்பது நிலநடுக்கோட்டுப் பகுதிதான். ஸ்ரீஹரிகோட்டா, நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து 13.72 டிகிரி வடக்கில் அமைந்துள்ளது. ஆனால், குலசேகரப்பட்டினம் 8.36 டிகிரி வடக்கில் உள்ளது. இந்த நெருக்கத்தால் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளின் சுற்றுப்பாதையின் தொலைவு குறையும். எரிபொருள் தேவையும் குறையும்.
வழக்கமாக ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படும் ராக்கெட்டுகள் இலங்கை, இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் மீது பறந்துவிடாமல் இருக்க, தென்கிழக்கு நோக்கி ஏவப்பட்டு பின்னர், கிழக்கு நோக்கித் திருப்பப்படுகிறது. ஆனால், குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும்போது திசை திருப்பிவிட வேண்டிய அவசியமில்லை.
அது மட்டுமில்லாமல் பூமி, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சாய்ந்த கோணத்தில் சுழல்கிறது கிழக்குப் பகுதிக்கு அருகில் இருந்து அனுப்பினால், குறைந்த எரிபொருள் செலவில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்த முடியும் இது இந்தியாவில் எந்த பகுதிக்கும் இல்லாத அமைவிடம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து தெற்கு, கிழக்குத்திசை நோக்கியும் ராக்கெட்டுகளை ஏவ முடியும்.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ மீட்டருக்கு குறைவாகவும், குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும், புயல், மின்னல் மற்றும் மழையின் தாக்கம் குறைவாக உள்ள பகுதிகளாக இருக்க வேண்டும். நிலையான காலநிலையும், நல்ல வெளிச்சம், குறைந்த பனி மற்றும் மேகமூட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கண்டறியப்பட்டது.
ராக்கெட்டின் உதிரி பாகங்கள், நெல்லை மாவட்டத்திலுள்ள மகேந்திரகிரி திரவ இயக்க அமைப்பு மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, சோதனை செய்து சாலை வழியாக ஸ்ரீஹரிகோட்டாவிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதேபோல, கிரையோசெனிக் இஞ்ஜினின் எரிப்பொருளான திரவ ஹைட்ரஜனும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இம்மையம், குலசேகரப்பட்டினத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளதால் போக்குவரத்துச் செலவுகளும் குறையும்.
விண்வெளி ஏவுதளங்களுக்கான உலகளாவிய சந்தை பல பில்லியன்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இது 14 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2030ல் 32 பில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் சந்தை பங்கு 2 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் வருவதால் விண்வெளி ஏவுதள சந்தையில் இந்தியா சுமார் 10 சதவீதத்தை இலக்காக கொள்ள முடியும். இது 3 பில்லியன் டாலர் மதிப்புடையதாக இருக்கும். இதில் தமிழ்நாடு 2 பில்லியன் டாலர்களை எளிதாக அடைய முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இங்கு அமையும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி என்ற சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
ராக்கெட் உருவாக்குவதற்கான பிற பொருட்களை வெகு தொலைவில் இருந்து இங்கு எடுத்து வந்தால் கூடுதல் செலவுகள் பிடிக்கும் என்பதால் தமிழக அரசின் தொழில் வளர்ச்சி கழகம், குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா அமைப்பது தொடர்பாக இஸ்ரோவுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
ராக்கெட் உருவாக்க பொருட்களை கொண்டு வருவதன் மூலம் இந்த தளத்தின் செயல்திறன் மேம்படும். பிரத்யேக விண்வெளி தொழில் பூங்காக்களை நிறுவுவதன் மூலம் இஸ்ரோ அதன் சப்ளையர்களை அருகியில் வைத்திருக்க இது உதவும்.
மேலும் குலசேகரபட்டினம் கடற்கரை பகுதியில் சிறு துறைமுகம் உருவாக்கப்படுவதன் மூலம் இங்கு செலுத்தப்படும் வெளிநாட்டு செயற்கைகோள் மற்றும் அதற்கான மூலப்பொருள்களை எளிதாக கொண்டு வந்து சேர்க்க இயலும் என்பதால் அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
Source : தி இந்து தமிழ், தினமணி நாளிதழ், விகடன் e magazine, google.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது