#Group2Mains_2023 காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல சட்டம் 2020
சட்டம் அமுலான நாள் 22.02.2020
காவிரி டெல்டா பகுதிகளில் நடக்கும் விவசாயமல்லாத சில பணிகள், பிராந்தியத்தின் விவசாயத்தை கடுமையாக பாதித்து, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால், இந்தப் பிராந்தியத்தின் விவசாயத்தைப் பாதுகாக்க சில நடவடிக்கைகளைத் தடைசெய்வதற்காகவும் காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டல சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து தலா ஐந்து வட்டாரங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலத்தின் கீழ் வருகின்றன.
இந்த பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.
துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த எஃகு ஆலை, இலகு இரும்பு உருக்காலை, தாமிர உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது.
விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஆகியவையும் இப்பகுதிகளில் தொடங்க அனுமதி கிடையாது. சட்டத்தின் இரண்டாவது பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தத் தடைசெய்யப்பட்ட தொழில்களின் பட்டியலில் எதையாவது சேர்க்கவோ, நீக்கவோ அரசால் முடியும்.
இந்த சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும் பகுதிகளில் மேலே சொன்ன தொழில்களைத் துவங்கி நடத்தினால் அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள், திட்டங்களை இந்த சட்டம் தடை செய்யாது. துறைமுகங்கள், இணைப்புச்சாலை, தொலைத்தொடர்புகள், மின்சாரம், நீர் விநியோகம் போன்ற திட்டங்களையும் இந்தச் சட்டம் பாதிக்காது.
தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு உருவாக்கப்பட்டு, முதலமைச்சர் தலைமையில் செயல்படும். இதில் முப்பது உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள். இப்பகுதியில் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை அவர்கள் அளிப்பார்கள்.
வேளாண் மேம்பாடு, வேளாண் மண்டல பாதுகாப்பு தொடர்பாக வேளாண் பொறியியல்துறையுடன் ஆலோசனை நடத்தி, ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதிக்குள் விரிவான திட்ட அறிக்கையை வேளாண்துறை தயாரித்து, வேளாண் மண்டலத்துக்கான ஆணையத்திடம் அளிக்க வேண்டும்.
மேலும், சம்பந்தப்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல், நிலம், நீர் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு, விவசாயிகள் வாழ்வாதாரம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய பகுதிகள், வேளாண்மை தொழிற்பிரிவுகள் உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகளை ஆணையம் வழங்கும். ஆணையத்துக்கு உதவ, வேளாண்துறைச் செயலர் தலைமையில், வேளாண்துறை இயக்குநரை உறுப்பினர் செயலராகவும், தோட்டக்கலைத் துறை இயக்குநர் உள்ளிட்டோரை உறுப்பினர்களாகவும் கொண்ட தொழில்நுட்பக் குழு அமைக்கப்படும். இக்குழு வேளாண்மை மண்டலத்தில் தேவையானவற்றை சேர்த்தல், இல்லாதவற்றை நீக்குதல் போன்றவற்றுக்கான ஆலோசனைகளை வழங்கும்.

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது