#Group2Mains_2023 ✴️ புலம்பெயர் தமிழர் நல வாரியம் ✴️
உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக நம்முடைய தமிழினம்தான் இருக்கிறது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள். வேலைகள் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள். தப்பிச் செல்வதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள். இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம் காலமாக நடந்து வருகின்றன.
எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தமிழகம்தான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல, அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் தமிழ்நாட்டின் கடமையாகும். இப்படிப் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உதவிகளைச் செய்யவும் தமிழக அரசு 2011 மார்ச் 1ம் நாள் வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம் இயற்றியது.
இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு புலம்பெயர் தமிழர் நலவாரியத்தை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் மூலதனத்தை கொண்டு புலம்பெயர் தமிழர் நிதியம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது.
💢 வாரியத்தின் செயல்பாடுகள் 💢
◆ புலம்பெயர் தமிழர் குறித்த தரவுத் தளம் (Database) ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டம், அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
● வெளிநாட்டுக்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படும்.
■ கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காகத் தமிழர்கள் புலம்பெயரும்போது, பயணப் புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், இப்பயிற்சியானது சென்னை மட்டுமின்றி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
★ வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு ஆலோசனை பெற வசதியாகக் கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும்.
◆ வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துள்ள தமிழர்களுக்கு எனத் தனியாகச் சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
◆ கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக சுமார் ஏழு லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையிழந்தும் திரும்பியுள்ளனர். இவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில், தமிழகம் திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
★ வெளிநாடுவாழ் தமிழர்களில் பெரும்பாலானோர் தங்களது சேமிப்பினைத் தாய்நாட்டில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஆர்வத்துடன் உள்ளனர். இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி, இவர்களது முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.
◆ புலம்பெயர்ந்த தமிழர்கள், தாம் பிறந்து வளர்ந்த சொந்த ஊரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர் மக்களின் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் 'எனது கிராமம்' என்கின்ற திட்டம் தொடங்கப்படும். இதில் பள்ளி, மருத்துவமனை, நூலகம் போன்ற கட்டிடங்களைக் கட்டித் தரவும், சீரமைத்திடவும் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
● கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று அங்கே நிரந்தரமாகக் குடியுரிமை பெற்றுள்ள தமிழர்களின் வாரிசுகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை உருவாக்கிடவும், தமிழ் மொழியைக் கற்றிட ஏதுவாகவும், தமிழ் இணையக் கல்விக் கழகம் மூலமாகக் குழந்தைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கப்படும். அதுமட்டுமின்றி, அங்குள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்றுவிப்பதற்காக ஊக்கத்தொகை மற்றும் தமிழ்க் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படும்.
■ புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும். இச்சங்கங்களின் மூலமாக நம்முடைய கலை, இலக்கியம் மற்றும் பண்பாடு பரிமாற்றங்கள் நடைபெறும். இதற்காக 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
★ பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் நாள் 'புலம்பெயர்ந்த உலகத் தமிழர் நாளாகக் கொண்டாடப்படும்.
புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவர் : திரு. கார்த்திகேய சிவசேனாபதி
மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள்நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு சார்ந்த உறுப்பினர்களாக - பொதுத் துறைச் செயலாளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், வெளிநாடுவாழ் தமிழர் தொடர்பான பணிகளைக் கவனித்து வரும் அரசு சிறப்புச் செயலாளர் / அரசு இணைச் செயலாளர் / அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, மேலாண்மை இயக்குநர், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாரியத்திற்கு நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும்.
Source : தி இந்து தமிழ் & மாலைமலர் நாளிதழ்

Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது