இருபதாம் நூற்றாண்டு அறிஞரும், "தமிழ்த் தேசியத்தந்தை"என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் 1933ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதி சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம் என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் இராசமாணிக்கம் என்பதாகும். பெருஞ்சித்திரன் என்பது இவருடைய புனைப்பெயர் ஆகும். இவர்,பாவேந்தர் பாரதிதாசன் பாடல்கள் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். எனவே தாம் இயற்றிய இரு காவியங்களையும் எடுத்துக்கொண்டு அவரை சந்திக்க சென்றார். ஆனால் பாவேந்தரை சந்திக்க முடியவில்லை. பிறகு ஒரு நூலை 'கொய்யாக்கனி' எனும் பெயரில் அவரே அவர் தம் அச்சகத்தில் அச்சிட்டுத் தந்ததையும் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார். மொழி, இனம், நாட்டு உணர்வுடன் பாடல்கள் புனைந்து, இதழ்கள் நடத்தி, மேடைதோறும் தமிழ் முழக்கம் செய்து, இயக்கம் கட்டமைத்து உண்மையாகத் தமிழுக்கு வாழ்ந்த பெருஞ்சித்திரனார் தன்னுடைய 62ஆவது வயதில் (1995) காலமானார்.