சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி - யார் இந்த எஸ்.வி.கங்காபூர்வாலா?
மகாராஷ்ட்ராவில், கடந்த 1962ம் ஆண்டு, மே 24ம் தேதி பிறந்த கங்கா பூர்வாலா, எல்.எல்.பி. படிப்பிற்கான தகுதிப் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தவர். கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூனியராக பணியாற்ற தொடங்கிய அவர், விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். கடந்த 1991 முதல் 2010 வரை சட்டக் கல்லூரியில் கௌரவ பகுதி நேர விரிவுரையாளராக இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு டிசம்பர் 11 முதல், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார். தேசிய அளவில் புல்வெளி ஆடுகள டென்னிஸ் விளையாட்டில் ஈடுபாடுள்ள கங்கா பூர்வாலா, மாநில அளவில் கூடைப்பந்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பொறுப்பேற்றுள்ளார். இவர், அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.